முன்னேஸ்வரம்
இலங்கையில் உள்ள சிவன் கோயில்களில் காலத்தால் மிகவும் முற்பட்ட சிவன் கோயில் முன்னேஸ்வரம் ஆகும். இது புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் என்ற பகுதியில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இக்கோயிலுக்குரிய சில மானிய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இக்கோயிலுக்கு உள்வீதி, மாடவீதி, இராஜவீதி என மூன்று வீதிகள் அமைந்துள்ளன.
முன்னேஸ்வரத்தில் 28 நாட்கள் கொண்ட ஒரு பெருந்திருவிழாவும் 10 நாட்களைக் கொண்ட இன்னோர் திருவிழாவும் இரு திருவிழாக்களாக நடைபெறுகின்றன.
முன்னேஸ்வரம் கோயில் இலங்கையில் உள்ள ஈஸ்வரங்களில் மிகவும் முதன்மையானது. இக்கோயிலில் இன, சமய, மொழி வேறுபாடின்றி வழிபட்டு அருள் பெறுகின்றனர்.
திட்டையில் குருபெயர்ச்சி விழா
மிகவும் பிரசித்திப்பெற்ற ஸ்தலமான தஞ்சை தென்குடி திட்டை குருபகவானுக்கு வருகிற 6ந் தேதி குரு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
.
தஞ்சை நகருக்கு அருகிலுள்ள திட்டை கிராமத்தில் வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் உள்ளது, திருஞானசம்பந்தரால் பதிகம் பாடப்பட்ட பெருமை உடையது இத்திருக்கோவில்.
இங்கு எழுந்தருளியுள்ள வசிஷ்டேஸ்வரரை சூரியன், சனி, குரு ஆகிய மூன்று முக்கிய கிரகங்களும் வழிபட்டு வரம் பெற்றுள்ளனர். எனவே இக்கோயிலில் குரு பெயர்ச்சி மற்றும் சனிப்பெயர்ச்சி ஆகிய நாட்களில் பக்தர்கள் குவிவது வழக்கம்.
நவக்கிரகங்களில் மகத்தான சுபபலம் பெற்றவர் குருபகவான். ஒருவரது ஜாதகத்தில் மிகக்கடுமையான பாவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கூட தனது சுபப் பார்வையால் தடுத்து நிறுத்தும் வல்லமை பெற்ற பிரகஸ்பதி என்று கூறுவார்கள்.
எல்லா சிவாலயங்களிலும் தெற்கு பிரகாரத்தில் ஆதி குருவான தட்சிணாமூர்த்தி சந்நிதி இருக்கும். இவரையே குருவாக பாவித்து வழிபடப்படுகிறார். இந்த தட்சிணாமூர்த்திக்காக குருபெயர்ச்சி விழாவும் நடத்தப்படுகின்றது.
ஆனால் திட்டை வசிஷ்டேஸ்வர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் நவக்கிரக குருபகவான் தனி சந்நிதியில் தனி விமானத்துடன் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இத்தகைய அமைப்பு வேறு எங்கும் கிடையாது.
எனவே தென்குடி திட்டை குரு பரிகாரத்திற்கு உகந்த ஸ்தலமாக அறியப்பட்டுள்ளது. இத்தலத்தின் பெருமை அறிந்து வெளிநாட்டவர்களும் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் உறவினர் கேமஸிமக்கோய், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் நிராலி, கலிபோர்னியா மாநில திருக்கோயில்களின் செயலாளர் ஆகியோர்கள் திட்டை வந்து குருபரிகார ஹோமங்கள் செய்து வழிபட்டு சென்றுள்ளனர்.
எதிர்வரும் கார்த்திகை மாதம் 21 ஆம் நாள் டிசம்பர் 6ந் தேதி காலை சுக்லபட்சம், நவமி ததி, பூரட்டாதி நட்சத்திரம் கூடிய நாளில் குருபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் பிரவேசிக்க இருக்கிறார்.
ஏறத்தாழ ஒரு ஆண்டு காலம் மகர ராசியில் இருந்து பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் உரிய பலன்களை வழங்க இருக்கிறார். ஒருவருடைய ஜென்ம ராசியில் இருந்து 2,5,7,9,11 ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் பொழுது குருபகவான் நற்பலன்களை அளிப்பார் என்பது பொதுவிதி. இதன்படி இந்த குருபெயர்ச்சியின் போது 2ம் இடத்திற்கு வருவதால் தனுசு ராசி அன்பர்களும், 5ம் இடத்திற்கு வருவதால் கன்னி ராசி அன்பர்களுக்கும், 7ம் இடத்திற்கு வருவதால் கடக ராசி அன்பர்களுக்கும், 9ம் இடத்திற்கு வருவதால் ரிஷப ராசி அன்பர்களுக்கும், 11ம் இடத்திற்கு வருவதால் மீன ராசி அன்பர்களுக்கும் குருபகவான் நற்பலன்களை வழங்குவார்.
ஜென்ம ராசியான 1ம் இடம் மற்றும் 3,4,6,8,10,12 ஆகிய இடங்களில் குருபகவானின் சஞ்சாரம் நற்பலன்களை அளிக்காது என்பதும் பொது விதியாகும். அதன்படி ஜென்ம ராசியான 1ம் இடமான மகர ராசி, 3ம் இடமான விருச்சிக ராசி, 4ம் இடமான துலாம் ராசி, 6ம் இடமான சிம்மராசி, 8ம் இடமான மிதுன ராசி, 10ம் இடமான மேஷ ராசி, 12ம் இடமான கும்ப ராசி ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கு குரு பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.
பரிகாரம் செய்ய வேண்டிய ஒவ்வொரு ராசிக்காரர்களும் குரு பெயர்ச்சி அடைந்த 15 நாட்களில் திட்டை குரு ஸ்தலத்திற்கு சென்று அங்கு நடைபெறும் லட்சார்ச்சனை மற்றும் குரு பரிகார ஹோமங்களில் பங்கேற்கலாம். மஞ்சளாடை அணிந்து வியாழக்கிழமை விரதம் இருந்து குருபகவானுக்கு அர்ச்சனை செய்து பரிகாரம் செய்யலாம். குருபகவானை முல்லைப் பூவால் அர்ச்சனை செய்து மஞ்சள் ஆடை சார்த்தி வழிபடுவது மிகச் சிறப்பு.
தனி சன்னதியில் உள்ள குருபகவானை மூன்று முறை வலம் வந்து நெய் விளக்கேற்றி வழிபடுவதும் சிறப்பாகும். இந்த குரு பெயர்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்களுக்காக வருகிற 13-12-08 மற்றும் 14-12-08 ஆகிய இருதினங்களில் லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது.
இதற்கு கட்டணம் ரூ.150 ஆகும். மேலும் 19-12-08 முதல் 22-12-08 வரை நான்கு தினங்கள் தொடர்ந்து பரிகார ஹோமங்கள் வேதவிற்பன்னர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளன. வேறு வெளியிடங்களில் நடைபெறும் ஹோமங்களில் கலந்து கொள்வதை விட குருசந்நிதியில் நடைபெறும் இந்த ஹோமங்களில் நேரில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து பரிகாரம் செய்யப்படும். இதற்கு கட்டணம்
ரூ. 300. முன்கூட்டியே பணம் அனுப்புபவர்கள் பெயர்கள் வரிசை முறையில் முன்பதிவு செய்யப்பட்டு உரிய முறையில் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
மணியார்டர் மற்றும் டிமாண்ட் டிராப்ட் அனுப்புபவர்கள் நிர்வாக அதிகாரி, அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், திட்டை613 003, தஞ்சை மாவட்டம் என்கிற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். சிறப்பாக நடைபெறவுள்ள இந்த குருபெயர்ச்சி விழா, லட்சார்ச்சனை மற்றும் குரு பரிகார ஹோமங்களில் நேரிலும் பங்கு கொண்டு குரு அருள் பெறுமாறு இக்கோவில் நிர்வாக அதிகாரி கோவிந்தராஜு தெரிவித்துள்ளார்.
மூலவர் வசிஷ்டேஸ்வரரின் விமானத்தில் சந்திரக்காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெறுகிறது அந்தக் கல். அது நீராக மாறி 24 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு சொட்டு தீர்த்தமாக இறைவன் மீது விழுகின்றது. இந்த அதிசயத்தை இப்போதும் காணலாம். அபிஷேகப் பிரியரான சிவனுக்கு சந்திரனின் நித்யாபிஷேகம் இது . தினம் ஒரு கலையாக தேய்வதற்கு சாபம் பெற்ற சந்திரனைக் காப்பாற்றி தன் சிரசில் வைத்து சிவன் சந்திரசேகரர் ஆனார். அதற்கு நன்றிக் கடனாக சந்திரன் தன் அபிஷேகத்தை இக்கோவிலில் காலம் காலமாக செய்து வருவதாக ஐதீகம்.